என்னவன் அளித்த வரம் !!!

நேற்றிரவு நான் நித்திரையில் லயித்திருந்தேன்

சில்லென்ற மென் காற்று என் தேகம் வருட

கண் விழித்துப் பார்த்தேன்

நீ என் அருகில் மிக அருகில்

அமர்ந்து என்னை உற்று நோக்கிக்கொண்டு இருந்தாய்…

என் மனம் என்னை கடிந்து கொண்டது

” எப்பொழுதும் காணும் கனவு தான் உறங்கு” என்று

என் புத்திக்கோ அது புரியவில்லை

புரியாத குழப்பத்திலும் நீ வந்த மகிழ்ச்சியிலும்

தன்னிலை அறியாமல் தவித்தது…

மனதில் பல நூறு பூக்கள் விரிய

கண்களில் பல ஆயிரம் மின்னல் வெட்ட

சொர்கத்தின் பல கோடி தேவதைகள் என்னை அழைக்க

நானும் நாய்குட்டி போல் நுழைந்தேன்

எனக்கும் உனக்குமான கனவுலகில்…

“ஏனடா என்னை விட்டு விலகினாய்?”

“ஏன் என்னை கடிந்து கொண்டாய் ?”

“ஏன் என்னிடம் பொய் சொன்னாய்?”

பல கேள்விகளை அடுக்கினேன் என்னவனிடம் …

ஆனால் ஒரு பதிலும் கிடைக்கவில்லை…

எப்பொழுதும் போலவே இன்றும் நீ …

மௌனமாய்…

எண்ணற்ற கேள்விகளும்

விடையிலா உனது மௌனங்களுமாய்

எனது கண்ணீருடன் நேரமும் கரைந்தது

“என்னடி இன்னும் தூக்கம்

வேலைக்கு நேரம் ஆகவில்லையா எழுந்திரி….”

அம்மாவின் ரீங்காரம் நம் உலகத்தை கலைத்தது…

 

எவ்வளவோ ஆசைகளும் கனவுகளும்

கண்களில் தெரிய

என் முகத்தை கண்ணாடியில் பார்த்தேன்

கனவில் உன்னுடன் கழித்த நிமிடங்களின்

ஆனந்தம் மினியது

கூடவே…

நீ விட்டு சென்ற சோகத்தின் மிச்சங்களும்

என்றும் விலகாத வடு போல்

ஆழமாக என் கண்களிலும் மனதிலும்….

Advertisements

காதல் !!!

வான மஹா ராஜனுக்கும்
மேக இளவரசிக்கும்
காதல்…
உலகமே கொண்டாடி மகிழ்கிறது
அந்தி சாயும் நேரம்
பல வர்ணங்களும் பூசி…

இருவருக்கும் இடையே ஒரு நாள்
ஊடல் ஏற்பட்டது…
மேக இளவரசி அழுதால்…
அடை மழை அடித்தது…
மஹா ராஜன் சமாதானம் செய்தான்
சிலென்ற மென் காற்று வீசியது…

இது போலவே…

காதல் வரும் பாதையும் தெரிவது இல்லை
நம்முள் ஏற்படும் பல நூறு மாற்றங்களும் புரிவது இல்லை
அவற்றின் விளைவுகளும் விடைகளும் மட்டும்
நம்மை அறியாமல் அனைவரும் அறிந்துவிடுகின்றார்கள் !!!

 

இயந்திரம்


கொள்ளும் நினைவுகளை அழிக்க
ஏன் இயந்திரம் 
கண்டுபிடிக்கப் படவில்லை ???

மனித மனங்கள் போடும் 
கணக்குகளை அறிய 
ஏன் இயந்திரம் 
கண்டுபிடிக்கப் படவில்லை ???

கண்கள் 
பேசும் பொய்மையை கண்டுகொள்ள 
ஏன் இயந்திரம் 
கண்டுபிடிக்கப் படவில்லை ???

நெருங்கிய உறவுகளை 
வஞ்சிக்கும் துரோகிகளை 
கண்டறிய 
ஏன் இயந்திரம் 
கண்டுபிடிக்கப் படவில்லை ???


இயந்திர கண்டுபிடிப்பில் 
வல்லமை பொருந்திய அறிஞர்களே 
என் மனுவை ஏற்று 
கண்டுபிடியுங்கள் 
இவற்றிற்கான இயந்திரங்களை...

முதியோர்

நிகழும் அனைத்தும் நன்றென்றே
எண்ணி கழித்திருந்தேன்
என் அறுபது ஆண்டு ஆயுட்காலத்தை...

ஆனால்
என் பிள்ளைகளின் கேள்வி
கனையை
எதிர்கொள்ள முடியாது
திராணியற்ற ஜடமாகிப் போயின
எனது நாக்கும் மனதும்... 


பணமும் பதவியும்
முந்திக் கொண்டு வந்தது
பந்தங்களையும் பாசங்களையும்
தோற்கடித்து பின்னோக்கி எத்தி விட்டு...

இயந்திர வாழ்வில்
மனிதனும் மனித இதயங்களும்
இயந்திரமானது...


எங்கள் முதுமையை
முதியோர் இல்லத்தில்
கழிக்கின்றோம்
இயந்திரங்களை சரி செய்யும்
சூத்திரம் அறியாத பேதைகளாய்...

தமிழ்

உலக மொழிகளில் ஆதி 
தமிழ் மொழி 
தமிழை தமிழர்கள் 
உயிர் மூச்சாய் கொண்டிருந்த 
காலங்கள் மாறி...

பணத்திற்கும் பதவிக்கும் 
தமிழ் மொழியையும் 
தமிழ் மக்களையும் 
பந்தாடுகின்றனர் 
அரசியல் பிரமுகர்கள்...
           
 இவற்றை கண்டும் காணாதது போல் 
 அவர்கள் அள்ளி வீசும் 
 இலவச எச்சில்களை 
 பஞ்சத்தில் பொறுக்கி தின்னும் 
 பரதேசிகளாயினர்
 என் குடி தமிழ் மக்கள்...

பேனா


களிமண்ணாய் மாறிப் போன 
மனித உணர்வுகளை 
உயிரூட்ட 
தன் குருதியை கொடுத்தும்
எவ்வித பயனும்மின்றி 
உயிர் நீத்துக் கொண்டிருக்கிறது 
இந்நூற்றாண்டின் 
பல 
பேனாக்கள் !!!

ஆணாதிக்கம்

பெண் பொறுமையின் சிகரம் 
அன்பின் மறுபொருள் 
தெய்வ சுவரூபம் 
இன்னும் பல பெருமைகள் 
காவியங்களிலும் கவிதைகளிலும்... 


ஆனால் 
நிதர்சனமான உண்மை யாதெனில் 
பெண் பணம் கொழிக்கும் மரம் 
சம்பளமில்லா வேலைகாரி 
ஏச்சும் பேச்சும் தாங்கும் போதிக்கழுதை...

இதுவே 
பெண்ணின் நிலை 
இந்த மென்பொருள் உலகிலும்  
பெண்ணை மண்ணாகக் கருதும் 
சில ஆணாதிக்க வர்க்கம் 
அழிந்தும் மிருகமாய் 
உணவின்றி இவ்வுலகில் அலைய 
கடவுகிறேன்!!!