தெய்வம்

ஏக்கங்கள்லவாறாய் 
என் வாழ்வின் 
பெரும் பகுதியை ஆட்கொண்டிருந்தது
 
பள்ளிக்கு அழைத்து வரும் 
தந்தையை பார்த்து...

சுற்றுலா கூட்டி செல்லும் 
தந்தையை பார்த்து...

விளையாட சொல்லி தரும் 
தந்தையை பார்த்து...

மதிகெட்ட ஆண்களிடம் இருந்து 
தன் பிள்ளையை பாதுகாக்கும் 
தந்தையை பார்த்து...

துன்பத்தின் பொது 
தோல் கொடுத்து ஆறுதல் கூறும் 
தந்தையை பார்த்து...

வெற்றி பெற்ற பிள்ளையை 
அனைத்து முத்தமிடும் 
தந்தையை பார்த்து...

திருமணம் முடித்து 
கண்கலங்கி 
வாழ்த்தி வழியனுப்பும் 
தந்தையை பார்த்து...

பேரக் குழந்தைகளை 
கொஞ்சி விளையாடும் 
தந்தையை பார்த்து...

நானும் கற்பனை செய்து கொள்வேன் 
என் தந்தையும் இவர்களை போல் 
தான் இருந்திருப்பார் என்று...

ஆனால் இன்று உணர்கிறேன் 
இவர்களை விடவும் 
மேலானவர் என் தந்தை...

ஏனெனில்
இவர்கள் இழக்காத ஒன்றை
எனக்காக இழந்திருக்கிறார் 
"தன் உயிரை"
என் தந்தையும் 
ஒரு தெய்வமே!!!
Advertisements

அப்பா

சிறு வயதில் 
பள்ளி செல்கையில் 
நான் நினைத்ததுண்டு...

யார் இவர்கள்? 
அனைத்து மாணவர்களையும் 
பள்ளியில் விட்டு போவதும் 
கூட்டி செல்வதுமாய்...

தோழிகளை வினவினேன் 
யார் இவர்?
"அவர் என் அப்பா"
அப்படியென்றால்?
சட்டென கேட்டேன் 
காரணம் புரியாமல்...

பதில் தெரியாமல் விழித்தனர்...

நானே யூகித்து கொண்டேன்
இவர்களுக்கு "அம்மா" இல்லை போல 
அதனால் தான் வேறு எவரோ 
இவர்களை பார்த்துக் கொள்கிறார்கள் என்று!!!

கடமை

இன்றைய தினம் 
என் வாழ்வின் 
ஆதாரமாய் வாழ்ந்த 
எனதுயிர் தந்தையின் நினைவு தினம் !

ஆம்!
அவரது இறப்பு 
எனது வாழ்வின் தொடக்கத்திற்காக...

அவரது உயிர் 
எனது ஆன்மாவை உயிர் பெற செய்யவே...

கடவுள் எனக்களித்த 
மிக பெரிய சாபம்!

தவறுகள் ஏதேனும் நான் 
செய்திடின் 
என்னை உயிர் பெற செய்யமால் 
இருந்திருக்கலாம்...

ஆனால் எனது தவறுகளுக்காக 
என் தந்தையின் உயிர் எடுப்பது 
எவ்விதத்தில் நியாயம்?

எங்கு போய் தீர்ப்பேன் 
என்னை பெற்ற கடனை தாய்க்கும் 
தன் உயிர் அழித்து என்னை உயிர் பெற செய்த தந்தைக்கும்...

ஒரு வேளை
நானும் இறக்க நேரிடுமோ 
பெற்றோருக்கு செய்ய வேண்டிய 
கடமைகளை 
செய்து முடிக்காத 
கடனாளியை...

சாபம்

நான் இவ்வுலகில் தோன்ற 
கடவுள் இழைத்த அநீதி 
என் தந்தையின் இழப்பு...

ஓர் உயிர் பிறக்க 
மறு உயிர் இறக்க 
என்பது தான்
கடவுளின் நீதியோ...

யாரை சோதிக்க 
இப்படி ஓர் பெருந்துயர்?

தந்தையை இழந்து 
தாயும் சேயும் வாழும் 
அவலத்தை கண்டு இன்புறவோ?

அல்லது 
பற்பல கனவுகளும் காவியங்களும் 
தன் மகளுக்காய் படைத்த 
தந்தையின் மனக்கோட்டை 
சிதைவுன்டத்தை எண்ணிக் களித்திடவோ?

எதற்காக இழைத்தாய் 
இப்பெரும் அநீதியை?

வருடங்கள் ஏழு 
காத்திருந்து 
சொல்லவொண்ணா 
பரிகாரங்களையும் பூஜைகளையும் 
உனக்காய் செய்து
பிள்ளை வரம் கேட்டு 
மன்றாடிய எனது பெற்றோரை
ஒரு புறம் மகிழ்வித்து 
மறு புறம் வேதனைக்குல்லாக்கினயே....

இதுவா கடவுளின் செய்கை?

எனக்காய் உயிர்விட்ட 
எனது தந்தையை எண்ணி 
நித்தம் வருந்தும் 
சாபத்தை என்னக்கேன் அளித்தாய்?

கணவரின்றி என் தாய் 
அனுபவித்த பல இன்னல்களும் 
எதற்காக?

ஒரு உயிரை கொடுத்து 
மறு உயிரை பறிக்கும் 
உன் சித்து விளையாட்டை 
எங்களோடு நிறுத்திக்கொள்...

இல்லையெனில் 
நீயும் ஒரு நாள் 
சபிக்கப்படுவாய்!!!

முதியோர்

நிகழும் அனைத்தும் நன்றென்றே
எண்ணி கழித்திருந்தேன்
என் அறுபது ஆண்டு ஆயுட்காலத்தை...

ஆனால்
என் பிள்ளைகளின் கேள்வி
கனையை
எதிர்கொள்ள முடியாது
திராணியற்ற ஜடமாகிப் போயின
எனது நாக்கும் மனதும்... 


பணமும் பதவியும்
முந்திக் கொண்டு வந்தது
பந்தங்களையும் பாசங்களையும்
தோற்கடித்து பின்னோக்கி எத்தி விட்டு...

இயந்திர வாழ்வில்
மனிதனும் மனித இதயங்களும்
இயந்திரமானது...


எங்கள் முதுமையை
முதியோர் இல்லத்தில்
கழிக்கின்றோம்
இயந்திரங்களை சரி செய்யும்
சூத்திரம் அறியாத பேதைகளாய்...

ஏக்கம் !!!

தந்தை முகம் பார்த்ததில்லை 

கதைகள் பேசி மகிழ்ந்ததில்லை 

நடை பயின்று கால்கள் வலித்ததில்லை 

தோல் சாய்ந்து அழுததில்லை …


இவை அனைத்திற்கும் 

ஏங்கிய வருடங்கள் 

இருபத்தி இரண்டு ஓடிவிட்டன…இன்று நான் பார்க்கிறேன் 

பேசி மகிழ்கிறேன் 

கால்கள் வலியில் தேய்கின்றன 

அழுவதற்கு ஆதரவை ஒரு தோல் உள்ளது…


ஆம்… உணதுரவால் உயிர் பெறுகிறது 

நான் ஏங்கித் தவித்த 

கிடைக்கப் பெறாத 

என் தந்தை உடனான 

நாட்களும் ஆசைகளும்…